இணையத்தள சுதந்திரம் உலகளவில் மோசமானதொரு நிலையில், இருப்பினும் செயற்பாட்டாளர்கள் பின்வாங்கவில்லை

2013 ஒக்டோபர் 3ஆம் திகதி வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஊடக ஆய்வு நிறுவனமானwww.freedomhouse.org ஆல் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. “புதிய அறிக்கை: இணையத்தள சுதந்திரம் உலகளவில் மோசமானதொரு நிலையில், இருப்பினும் செயற்பாட்டாளர்கள் பின்வாங்கவில்லை” (New Report: Internet Freedom Deteriorates Worldwide, but Activists Push Back) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், ‘‘இந்த நிலையிலும் மதிப்பீடு செய்த 60 நாடுகளில் 35 நாடுகள் கடந்த வருடம் தொழில்நுட்ப அல்லது சட்டரீதியான கண்காணிப்பை விரிவுபடுத்தியிருந்தன என ப்ரீடம் ஒன் தி நெட் 2013 கண்டறிந்துள்ளது. அரசியலில் எதிர்க்கருத்துள்ளோர் மற்றும் குடிமக்கள் செயற்பாடுகளை அடக்குவதற்கு எத்தனிக்கும் நாடுகளில் இந்த கண்காணிப்பு முறையை பயன்படுத்துவது பிரச்சினைக்குரியதாகும். சிறைத்தண்டனை, சித்திரவதை மற்றும் மரணமடையும் வரை விசாரணை மேற்கொள்ளுதல் போன்ற சந்தர்ப்பங்களின்போது தங்களுடைய மின்னஞ்சல் மற்றும் பிற தகவல் தொடர்புகள் சமர்ப்பிக்கப்பட்டன எனவும், அவை அரசியல் வழக்குகளின்போது ஆதாரமாக பயன்படுத்தப்பட்டன எனவும் சில சர்வாதிகார நாடுகளில் உள்ள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்..‘‘ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.

FOTN 2013_Map copy

பரந்த கண்காணிப்பு, இணையத்தள உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துகிற புதிய சட்டங்கள், அதிகரிக்கும் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோரின் கைது ஆகியனவற்றால் கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் இணையத்தள சுதந்திரம் சரிவைச் சந்தித்துள்ளதாக ப்ரீடம் ஹவுஸ் (Freedom House) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதில் பாவனையாளர்கள் அதிக பயன்பெறுவதோடு, பல சந்தர்ப்பங்களில் புதிய அடக்குமுறைகளை முன்கூட்டியே அறிந்து தடுக்கவும் உதவியதாக ‘ப்ரீடம் ஒன் தி நெட் 2013‘ (Freedom on the Net 2013) கண்டறிந்துள்ளது.

“தடைப்படுத்தல் மற்றும் பில்டர் செய்வதையே பெரும்பாலான நாடுகள் தணிக்கை முறையாக தேர்ந்தெடுத்துள்ளன. இணையத்தளத்தில் யார் என்ன சொல்கிறார்கள், என்ன கருத்துக்களை முன்வைக்கிறார்கள் என தேடியறியவும், அவர்களை தண்டிப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கவும் அரசுகள் செயற்பட்டுகொண்டிருக்கின்றன” என ப்ரீடம் ஹவுஸின் ப்ரீடம் ஒன் தி நெட்டின் பணிப்பாளர் சங்ஜா கெலி தெரிவித்துள்ளார். “சில நாடுகளில் பேஸ் புக்கில் கருத்து வெளியிடுவதற்காகவும் அல்லது அதிகாரத்துவமிக்க நிறுவனமொன்றை விமர்சித்து நண்பர் ஒருவர் கருத்து வெளியிடும்போது அதனை ‘லைக்’ செய்யும் விடயத்துக்காகவும் இணையத்தளத்தை பயன்படுத்துவோர் கைதுசெய்யப்படலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
60 நாடுகளில் இணையத்தள சுதந்திரத்தின் முக்கிய போக்குகளை அவதானிக்கும் ப்ரீடம் ஒன் தி நெட் 2013 திட்டமானது, நுழைவதற்கு தடங்களை ஏற்படுத்தல், உள்ளடக்கத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வரம்புகள், பயன்படுத்துவோரின் உரிமை மீறல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டையும் மதிப்பீடு செய்கிறது.

கண்காணிப்பு நடவடிக்கை அதிகரித்தமையே ஆண்டின் மிக முக்கிய போக்காக காணப்பட்டது. முன்னாள் ஒப்பந்தக்காரரான ஸ்டீவ் ஸ்னோடன் அமெரிக்க அரசின் இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளை அம்பலத்துக்கு கொண்டுவந்ததன் மூலம் உலக அளவில் விவாதமொன்றை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையிலும் மதிப்பீடு செய்த 60 நாடுகளில் 35 நாடுகள் கடந்த வருடம் தொழில்நுட்ப அல்லது சட்டரீதியான கண்காணிப்பை விரிவுபடுத்தியிருந்தன என ப்ரீடம் ஒன் தி நெட் 2013 கண்டறிந்துள்ளது. அரசியலில் எதிர்க்கருத்துள்ளோர் மற்றும் குடிமக்கள் செயற்பாடுகளை அடக்குவதற்கு எத்தனிக்கும் நாடுகளில் இந்த கண்காணிப்பு முறையை பயன்படுத்துவது பிரச்சினைக்குரியதாகும். சிறைத்தண்டனை, சித்திரவதை மற்றும் மரணமடையும் வரை விசாரணை மேற்கொள்ளுதல் போன்ற சந்தர்ப்பங்களின்போது தங்களுடைய மின்னஞ்சல் மற்றும் பிற தகவல் தொடர்புகள் சமர்ப்பிக்கப்பட்டன எனவும், அவை அரசியல் வழக்குகளின்போது ஆதாரமாக பயன்படுத்தப்பட்டன எனவும் சில சர்வாதிகார நாடுகளில் உள்ள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு சமூக ஊடகங்களுக்கு பலம் இருப்பதால் அதற்கு அஞ்சி இணையத்தள சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காக சட்டங்களை நிறைவேற்ற பல அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. 2012 மே மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் மதிப்பீடு செய்யப்பட்ட 60 நாடுகளில் 24 நாடுகள் இணையத்தள சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. சில நாடுகள் இணையதளத்தில் வெளிவரும் சில கருத்துக்களுக்காக 14 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையும் வழங்க முடிவுசெய்துள்ளன.

அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்ட 60 நாடுகளில் 34 நாடுகளில் இணையத்தள சுதந்திரம் சரிவைச் சந்தித்திருந்தது. குறிப்பாக வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் அடக்குமுறை மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருந்தது. வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் தணிக்கை முடுக்கிவிடப்பட்டிருந்தது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேஸில் ஆகிய ஜனநாயக நாடுகளிலும் இணையத்தள சுதந்திரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஐஸ்லாந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் பெருமளவு இணைய சுதந்திரம் உள்ள நாடுகள் கொண்ட பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தன. 100 புள்ளிகள் அடிப்படையில் நாடுகள் மதிப்பிடப்படுகின்ற அதேவேளை, இரகசிய கண்காணிப்பு முறை அம்பலத்துக்கு வந்ததால் 5 புள்ளிகளை அமெரிக்கா இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும், அமெரிக்கா முதல் 5 நாடுகளில் இடம்பெற்றிருக்கின்றன.
சீனா, கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் தொடர்ந்து இரு வருடங்களாக இணையத்தள சுதந்திரம் மீது அடக்குமுறை பிரயோகிக்கின்றமையை காணக்கூடியதாக இருந்தது.

இணையத்தை கட்டுப்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் 10 வழிமுறைகள்

ப்ரீடம் ஒன் தி நெட் 2013, 60 நாடுகளில் நடத்திய மதிப்பீட்டின் மூலம் இணையத்தளத்தை கட்டுப்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் 10 வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1. தடைப்படுத்தல் மற்றும் பில்டர் செய்தல்: மதிப்பீடு செய்யப்பட்ட 60 நாடுகளுள் 29 நாடுகளில் அதிகாரத்துவமிக்க நிறுவனங்கள் கடந்த ஆண்டு அரசியல் மற்றும் சமூக உள்ளடக்க இணையத்தளங்களை தடைப்படுத்தின. சீனா, ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டன. தென் கொரியா, இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள் பில்டர் செய்ததன் மூலம் அரசியல் தன்மை கொண்ட இணையத்தளங்களும் பாதித்தன. கடந்த ஆண்டு ஜோர்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தடைப்படுத்தலை தீவிரப்படுத்தியிருந்தன.

2. ஆட்சி இயந்திரத்தை விமர்சித்தவர்களுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள்: கடந்த ஆண்டு குறைந்தது 31 நாடுகளில் எதிர்கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அரசியல் காரணங்களுக்காக சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டனர். அரசியல் செயற்பாடுகளின்போது இத்தகைய தாக்குதல்கள் இயல்பாகவே இடம்பெறும். உதாரணமாக, மலேஷியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் தேர்தல் காலங்களில் பிரபலமான சுயாதீன ஊடக நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீண்டும் மீண்டும் DDoS தாக்குதல்களுக்கு ஆளாயின.

3. புதிய சட்டங்கள் மற்றும் கைதுகள்: இணையத்தளத்தில் குறிப்பிடத்தக்க அரசியல், மத அல்லது கலந்துரையாடல்களில் ஈடுபடும் ஒன்லைன்களை தடைசெய்யக்கூடிய அல்லது அதன் சுதந்திரத்தை மீறக்கூடிய வகையில் தேசிய பாதுகாப்பு தொடர்புடைய தெளிவற்ற கட்டுப்பாடுகள் கொண்ட சட்டங்களை இயற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 28 நாடுகள் இணையத்தள உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் பயன்படுத்துனரை கைதுசெய்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களுள் அரசியல் கருத்துவேறுபாடு உள்ளவர்கள் தவிர அதிகாரத்துவமிக்க நிறுவனங்கள் மற்றும் ஆதிக்க மதத்தை சமூக வலைதளங்கள் ஊடாக விமர்சனம் செய்து கருத்துக்களை வெளியிட்ட சாதாரண பொதுமக்கள் தொகுதியினரும் அடங்குகின்றனர்.

4. கொடுப்பனவுகள் பெறும் அரச சார்பு வர்ணணையாளர்கள்: மொத்தம் 22 நாடுகளில் அரச எதிர்ப்பாளர்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்னெடுத்து, பிரசாரங்களை பரப்பி தாம் அரசுடன் தொடர்புகொண்டவர்கள் என்பதை மறுத்து அரசின் கொள்கைகளை பாதுகாப்பதுடன், வர்ணணையாளர்கள் என்ற வகையில் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு ஒன்லைன் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இந்த உபாயத்தை முன்னெடுக்கும் நாடுகளில் சீனா, பஹ்ரேன் மற்றும் ரஷ்யா முன்னணியில் இருக்கின்றன. பெலாரஸ் மற்றும் மலேஷியா போன்ற நாடுகளிலும் இவ்விடயம் பொதுவான ஒரு விடயமாக காணப்படுகிறது.

5. உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் கொலை: இணையத்தளத்தில் கருத்து வெளியிட்டமைக்காக 26 நாடுகளில் ஒருவரேனும் தாக்குதல்களுக்கு, துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார். 5 நாடுகளில் ஒருவரேனும் உயிரழந்துள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இணையத்தளங்களில் தகவல் வெளியிட்டமைக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே பெரும்பாலான கொலைகள் மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சிரியாவில் டஜன் கணக்கான இணையத்தள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அத்தோடு, மெக்ஸிகோவிலும் பலர் கொல்லப்பட்டனர். எகிப்தில் பேஸ்புக் நிர்வாகிகள் பலர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதோடு, ஆர்ப்பாட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் குடிமக்கள் ஊடகவியலாளர்களை இலக்குவைத்தனர்.

6. கடுங்கண்காணிப்பு: குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக ஒரு சில தகவல்தொடர்புகளை இடைமறிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்ற போதிலும், அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்த முறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. 35 நாடுகளின் அரசுகள் கடந்த ஆண்டு தங்கள் தொழில்நுட்பம் அல்லது சட்டரீதியான கண்காணிப்பு அதிகாரங்களை மேம்படுத்தியுள்ளன.

7. நீக்குமாறு அல்லது அழித்துவிடுமாறு கோருதல்: சட்டவிரோதமான உள்ளடக்கமொன்றை நீக்குமாறு நிறுவனமொன்றிடம் தனிநபரோ அல்லது அரசோ கோரிக்கை விடுக்கலாம். பொதுவாக நீதிமன்ற மேற்பார்வையுடன்தான் அதனை மேற்கொள்ள முடியும். ஆனால் ரஷ்யா, அசர்பய்ஜான் போன்ற பல நாடுகள் நீதிமன்றங்களை அவமதித்து சட்ட நடவடிக்கை அல்லது பதிலடி கொடுக்கப்போவதாக அச்சுறுத்தி உள்ளடக்கத்தை நீக்குமாறு கோருகின்றன். இது பயனுள்ள தணிக்கை முறையாக மாறியுள்ளது. தகவல்களை அழிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை நிராகரித்தால் வேலை இழப்பை அல்லது தடுத்துவைப்புக்கு முகம்கொடுக்கநேரிடும் என ப்ளொக்கர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

8. சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு பயன்பாடுகளை தடுத்தல்: கடந்த ஆண்டு 19 நாடுகளில் யூ டியுப், டுவிட்டர், பேஸ்புக் அல்லது தகவல் தொடர்பு பயன்பாடுகள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளன. கண்காணிக்க கடினமான அல்லது தொலை தொடர்பு நிறுவனங்களில் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஸ்கைப் (Skype), வய்பர் (Viber) மற்றும் வட்ஸ்அப் (WhatsApp) போன்ற தகவல் தொடர்பு பயன்பாடுகளை அவர்கள் இலக்குவைத்தார்கள்.

9. இடைத்தரகர் பொறுப்பு: இணைய சேவை வழங்குனர்கள், ஹோஸ்டிங் சேவைகள், இணையத்தள பொறுப்பாளர்கள், இணையத்தள கலந்துரையாடல்களை முன்னெடுப்பவர்கள் போன்ற இடையில் பொறுப்பு வகிப்பவர்கள் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் தொடர்பாக சட்டபூர்வ பொறுப்பை கொண்டுள்ளார்கள் என்ற இறுக்கமான சூழ்நிலை 22 நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள நிறுவனமொன்று ஓர் ஆண்டுக்கு இணைத்தளங்களை கண்காணித்து 10 மில்லியன் செய்திகளை அழிப்பதற்காக ஒரு பிரிவையே வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

10. சேவையின் கழுத்தை நெரித்தல் அல்லது நிறுத்துதல்: பிரதேச அல்லது நாடு தழுவிய ரீதியில் இணைய மற்றும் தொலைபேசி தொடர்பை துண்டிக்கவோ, வேண்டுமென்றே மெதுவான (கழுத்தை நெரித்தல்) சேவையை வழங்கவோ தொலை தொடர்பு உட்கட்டமைப்பை அரசால் கட்டுப்படுத்த முடியும். கடந்த ஆண்டு சிரியாவில் பல சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. சமூக அமைதியின்மை அல்லது முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் சீனா, இந்தியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

A Global Assessment of Internet and Digital Media | Internet Freedom Map 2013

Freedom-of-teh-Net EDD